search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நதிநீர் இணைப்பு"

    • பல மாதங்களாக கிணற்றுக்குள் வெள்ளம் சென்றும் கிணறுகள் நிரம்பவில்லை.
    • கடந்த 17-ந்தேதி சபாநாயகர் அப்பாவு நதிநீர் இணைப்பு கால்வாய் வெள்ளோட்டத்தை தொடங்கி வைத்தார்.

    திசையன்விளை:

    நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள ஆயன்குளம் படுகை அருகே 2 பம்பு செட் கிணறு உள்ளது. சுமார் 75 அடி ஆழம் கொண்ட பழமையான இந்த கிணற்றில் மழைக்காலங்களில் படுகைகளில் உள்ள தண்ணீரை அந்த பகுதி விவசாயிகள் கால்வாய் வெட்டி கிணறுகளுக்குள் விட்டனர்.

    பல மாதங்களாக கிணற்றுக்குள் வெள்ளம் சென்றும் கிணறுகள் நிரம்பவில்லை. ஆனால் அதே நேரத்தில் அதனை சுற்றிலும் உள்ள கிணறுகளில் நீர்மட்டம் உயர்ந்தது. இதனால் அவற்றில் இருந்த உப்பு நீர் நல்ல தண்ணீராக மாறியது. இந்த அதிசய கிணறு குறித்த தகவல் நெல்லை மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிய வந்தது. உடனே அப்போதைய நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு, சபாநாயகர் அப்பாவு ஆகியோர் அதிசய கிணற்றை நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

    மேலும் சென்னை ஐ.ஐ.டி. புவியியல் துறை பேராசிரியர் வெங்கட்ரமண சீனிவாசன் தலைமையிலான குழுவினர் நேரில் பார்வையிட்டு 4 முறை ஆய்வு செய்தனர். அதிசய கிணறு, தண்ணீரின் தன்மை, அருகில் உள்ள மற்ற கிணறுகளின் தன்மை மற்றும் நிலத்தடி நீர்மட்டம், ராதாபுரம் முதல் சாத்தான்குளம் வரை 150 கிணறுகளில் உள்ள நீர் ஆய்வு செய்யப்பட்டது. அதன் பயனாக பூமிக்கு அடியில் சுண்ணாம்பு பாறைகள் உள்ளது எனவும், பூமிக்கு அடியில் 50 கிலோமீட்டர் விரிந்து காணப்படும் நீரோடைகள் உள்ளது எனவும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த ஆய்வு டிரோன் கேமரா மூலமாக நடத்தப்பட்டது.

    இதனால் இந்த அதிசய கிணறு நதிநீர் இணைப்பு கால்வாய் திட்டத்தில் சேர்க்கப்பட்டது. தண்ணீர் கிணறுகளுக்குள் செல்வதற்கு வசதியாக ஆயன்குளம் படுகை அருகில் 200 கனஅடி தண்ணீர் செல்ல வசதியாக தனி ஷட்டர் அமைக்கப்பட்டு கிணறுகள் வரை தனி கால்வாயும் அமைக்கப்பட்டு இருந்தது. கடந்த 17-ந்தேதி சபாநாயகர் அப்பாவு நதிநீர் இணைப்பு கால்வாய் வெள்ளோட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த நீரானது அதிசய கிணற்றில் அதிக அளவில் சென்றதால் கால்வாயில் வைக்கப்பட்டு இருந்த மரப்பலகைகள் கிணற்றுக்குள் விழுந்தது.

    இதனால் கிணற்றுக்குள் தண்ணீர் செல்லும் பாதை அடைபட்டது. அதை அந்த பகுதி விவசாயிகள் அகற்றியதை தொடர்ந்து தற்போது அதிசய கிணறுகளில் தண்ணீர் குறைந்த அளவில் சென்று கொண்டிருக்கிறது. எனவே கால்வாயில் செல்லும் தண்ணீரை தற்காலிகமாக அடைத்து கிணற்றில் விழுந்த காங்கிரீட் தகடுகளை அகற்றி கிணற்றை தூர்வாரி மீண்டும் 200 கனஅடி தண்ணீர் கிணற்றுக்குள் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×